கரம்ஜித் சிங்(28) என்ற இளைஞர் சமீபத்தில் போதைப் பொருள் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். பின்னர் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பர்னாலா சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அந்த வழக்கு விசாரணைக்காக அவர் மான்சா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் முறையிட்ட அவர், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளனர். எய்ட்ஸ், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு, தனி அறைகள் ஒதுக்கப்படவில்லை என்று கூறினார்.
மேலும் கைதிகளை தவறாக நடத்துவதற்கு எதிராக, தான் குரல் கொடுத்த காரணத்திற்காக, சிறைக் கண்காணிப்பாளர் என்னை தாக்குகிறார். தொடர்ந்து சித்ரவதை செய்கிறார். அத்துடன் தனது முதுகில் பயங்கரவாதி’ என்ற பொருள் படும், “அட்வாடி” என்ற வார்த்தையை பழுக்க வைத்த இரும்பிக் கம்பியால் எழுதி முத்திரை குத்தினார்” என குற்றம்சாட்டினார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.