மதுரை மேலப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மாரிச் சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் “மதுரை மேலப்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் வரும் 8ஆம் தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பாக உரிய அனுமதிகோரி காவல்துறையிடம் மனு சமர்ப்பித்து உள்ளோம். ஆகவே கரகாட்டம் நடத்துவதற்கு அனுமதி மற்றும் நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும்” என கோரப்பட்டு இருந்தது. இம்மனு நீதிபதி சத்திகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் நீதிபதி, கட்டுப்பாடுகளுடன் கரகாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவில் இருப்பதாவது, கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடக்கக் கூடாது. நாகரிகமான உடைகளை அணியவேண்டும். நிகழ்ச்சியில் இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது. எந்தஒரு அரசியல் கட்சி, மதம், சமூகம் (அ) சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ (அல்லது) நடனமோ இருக்கக் கூடாது. சாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக்கூடாது. நிகழ்ச்சி இரவு 7 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே நடத்தவேண்டும் என நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்தார்.