கராத்தே மாஸ்டரிடம் 21 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சாரதா மில் ரோட்டில் கராத்தே மாஸ்டரான சௌகத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக தனது வீட்டை 3 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்து கடன் பெற முடிவு செய்தார். அப்போது சௌக்கத்துக்கு அறிமுகமான நாகூர் மீரான் என்பவர் வங்கியில் தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் 3 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு நாகூர் மீரானுக்கு 5 சதவீத கமிஷன் வழங்குவதாக பேசப்பட்டது. இதனை நம்பிய சௌகத் பல்வேறு தவணைகளாக நாகூர் மீரான், அவரது நண்பர் ஜான் ஆகியோருடன் 21,20,000 வரை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி நாகூர் மீரான் கடனை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் மாற்றப்பட்டதை உணர்ந்த சௌகத் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.