கரிமலை வனப்பாதையில் நாளை முதல் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.
ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதனால் மீண்டும் கரிமலை வழியாக பாதை யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான வசதிகளை தயார் செய்யும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த பாதையில் இன்று அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பாதையில் காலை 5.30 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வனத்துறையின் செக் போஸ்ட்களில் உள்ள 8 இடங்களில் கடைகளும் மற்றும் சிற்றுண்டி கூட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களின் அவசர தேவைக்காக முக்குழி மற்றும் கரிமலை ஆகிய இடங்களில் மருத்துவமனை வசதிகளும் உள்ளன. மாம்பட்டி, கல்லி டாம் ஹில், கரியிலம் தோட்டம், மஞ்ச பொட்டிதட்டு ஆகிய பகுதிகளில் அவசர மருத்துவ சிகிச்சை மையங்களும் உள்ளன.