மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. இன்று காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “அதிமுகவின் மாபெரும் போராட்டத்தை கண்டு ஸ்டாலின் நடுங்கி கொண்டிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்வதைவிட்டு. அவர் அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார்; திமுக அழிக்க நினைத்தபோதெல்லாம், வீறுகொண்டு எழுந்து ஆட்சியை பிடித்ததே அதிமுகவின் வரலாறு. கருணாநிதியாலேயே அழிக்க முடியவில்லை; ஸ்டாலினால் முடியுமா..” என்று சவால்விட்டுப் பேசினார்.