திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டத்தில் திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 1000 பேர் விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக கட்சியானது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்று கட்சியிலிருந்து செல்பவர்களுக்கு மட்டும் தான் திமுக அமைச்சர் பதவி கொடுக்கிறது. திமுக ஆட்சியில் சம்பாதித்த அனைத்து கருப்பு பணத்தையும் வெள்ளை பணமாக மாற்றுவதற்காக தான் உதயநிதி ஸ்டாலின் திரை துறையில் இருக்கிறார்.
அதன் பிறகு சினிமா துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கமிஷன் பெரும் அரசாக திமுக இருக்கிறது. திமுக அரசு சினிமா துறையிலும் ஆதிக்கம் செலுத்துவதால் 150-க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இவ்வளவு நாட்கள் ஆகியும் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டத்தையும் திமுக ரத்து செய்துவிட்ட நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தால் அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்படும்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலையில் அதை திமுக ஆமை வேகத்தில் செய்வதோடு, எங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை மட்டும் தான் தற்போது செய்து கொண்டிருக்கிறது. மாண்டஸ் புயலினால் பெரிய அளவில் பாதிப்பும் இல்லை. ஆனால் இதில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டதாக கூறி பொய் சொல்லுகிறது என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.