மறைந்துபோன உறவுகளையும் மறந்துபோன அனுபவங்களையும் நினைவுகளாக கண்முன்னே காட்டுபவை புகைப்படங்கள். ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். புகைப்படக் கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை 183வது புகைப்பட தினம் கொண்டாடப்படுகின்றது. காலம்சென்ற கண்ணாடிக்குள் கரையான் அரித்த புகைப்படத்தை எடுத்துப் பார்க்கும்போது பூவிலிருந்து தேனை உறிஞ்சும் வண்டுபோல் ஆனந்தத்தை உணர்வார்கள்.
கேமரா ஆப்ஸ்கரா என்ற கருவி மூலம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தனது பயணத்தை தொடங்கிய புகைப்படக்கலை, தற்போது பல தலைமுறைகளை கடந்துள்ளது. டிஜிட்டல் கேமரா ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எளிதாக புகைப்படங்களை எடுக்கலாம் என்றாகிவிட்டது. 1839 ஆம் வருடம் சர் ஜான் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ் போட்டோக்களை எடுத்தார். புகைப்படங்களை எடுப்பது என்பது தனிக்கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்.
ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படம் உதவுகின்றது. ஒரு காலகட்டத்தில் அரிதாக இருந்த புகைப்படம் தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் மூலம் எளிதாகி உள்ளது. செல்ஃபி எனப்படும் சுய புகைப்பட முறையில் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். ஒரு நல்ல புகைப்படத்தை எடுக்க நாள் முழுவதும் கூட காத்திருக்கின்றனர் புகைப்பட கலைஞர்கள் என்னதான் செல்ஃபி எடுத்தாலும் கருப்பு-வெள்ளை புகைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.