சென்னை ஏர்னாவூர் சுனாமி குடியிருப்பு 4 வது பிளாக்கில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி. இவர் மனைவி ஸ்ருதி. இவர் பி.ஏ. பட்டதாரி ஆவார். இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஜய் தனது மனைவியை அடித்து துன்புறுத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சுருதி எண்ணூர் போலீசில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி விஜய் கைது செய்து, பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இதனையடுத்து கணவரும் சேர்ந்து வாழ பிடிக்காத சுருதி திருவொற்றியூர் என்.டி.ஓ குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் 118 ஆவது பிளாக்கில் தோழி ஐஸ்வர்யா என்பவரது வீட்டில் தனது குழந்தையுடன் அடைக்கலம் புகுந்தார். ஐஸ்வர்யாவின் கணவர் பெயர் சூரஜ் ஜெனிஸ் கண்ணா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சூரத் ஜெனிஸ் கண்ணாவும் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவும் சேர்ந்து தங்களிடம் அடைக்கலம் தேடி வந்த சுருதியின் கருமுட்டை எடுத்து சட்டவிரதமாக விற்பனை செய்ய திட்டமிட்டனர். இதற்காக பெண் தரகர் ஒருவர் மூலம் தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து சுருதியின் கருமுட்டை எடுக்க முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து பெண் தரகர் ஆலோசனையின்படி பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சுருதியை கட்டாயப்படுத்தி தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்காக அவருக்கு ரூ.20000 கொடுப்பதாக கூறினார். ஆனால் மருத்துவமனையில் சென்று விசாரித்த போது கருமுட்டை பெற ரூ.50,000 வரை கொடுப்பதாக தெரிவித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த, சுருதி இது குறித்து பிரிந்து போன தனது கணவர் விஜயிடம் போனில் தெரிவித்தார். அவர் நீ வீட்டுக்கு வா பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். இதனையடுத்து தன்னை ஏமாற்றிய தோழி ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு சென்று சொல்லிவிட்டு வருகிறேன் என்று கூறிய சுருதி ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்றார். கருமுட்டை கொடுக்காமல் திரும்பி வந்ததால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யாவும் அவருடைய கணவரும் சேர்ந்து கத்தியின் பின்புறத்தால் சுருதியை சரமாரியாக தாக்கி, அவரை அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். உடனே சுருதி அங்கிருந்து தப்பி, இது குறித்து திருவாற்றியூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரஜ் ஜெனிஸ் கண்ணா அவருடைய மனைவி ஐஸ்வர்யா ஆகியோரை கைது செய்தனர். மேலும் கருமுட்டை விற்பனை குறித்து தாம்பரம் தனியார் ஆஸ்பத்திரியில் நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அதுமட்டுமில்லாமல் அந்த பெண் தரகர் யார்? என்பதையும் தேடி வருகின்றனர்.