2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்தது.
எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் பொங்கல் பரிசோடு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் கரும்பு கொள்முதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும், முழு கரும்பின் விலை அதிகபட்சம் 33 ஆக இருக்க வேண்டும். உள்ளூரில் விளைந்த கரும்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், விவசாயிகள் தரப்பிலிருந்து புகார்களுக்கு இடமளிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.