மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தகடி கிராமத்தில் ராமச்சந்திரன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் அப்பகுதியில் இருக்கும் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ராமச்சந்திரனை தேடி சென்றனர். அப்போது மதியழகன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் ராமச்சந்திரன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவருக்கு அருகில் மின் கம்பி அறுந்த நிலையில் கிடந்ததால் மின்சாரம் தாக்கி ராமச்சந்திரன் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமச்சந்திரனின் உடலை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .