திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இடம் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுப் பொருள்களில் பணத்தை சேர்க்காமல் விட்டுவிட்டது விடியா அரசு என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். தமிழக அரசு நேற்று முன்தினம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை அறிவித்தது. அதில் மொத்தம் 20 பொருள்கள் இடம்பெற்றிருந்தது. அதாவது பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பாசி பருப்பு, ஏலக்காய், நெய், சீரகம், மஞ்சள்தூள், உளுந்தம் பருப்பு, மிளகு, மிளகாய் தூள், கடலை பருப்பு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மல்லித் தூள் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இதனை தொடர்ந்து அமைத்த சக்கரபாணி கரும்பு சேர்க்கப்படும் என்று அறிவித்து இருந்தார். ஆனால் அதில் ரொக்கப்பரிசு இடம்பெறவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் “பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த ஆட்சியில் அம்மா அவர்கள் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் சேர்த்து, பொங்கல் பரிசுப் பணமும் முழு கரும்பும் வழங்கினார். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பரிசு பொருளில் கரும்பு, பணம் இடம்பெறவில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் அறிவித்த பொங்கல் தொகுப்பில் கரும்பு மட்டும் சேர்க்கப்பட்டது. ஆனால் பணத்தை காணவில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணமும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதில் தெரிவித்திருந்தார்.