தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என முக்கிய அரசியல் தலைவர்களை கொண்ட மாவட்டம் கரூர். அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய சொந்த மாவட்டம் என்பதால் கரூரை எப்போதும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார். இவர் அதிமுகவில் இருந்த போதும் சரி தற்போது திமுகவில் இருக்கும் போதும் சரி கரூர் செந்தில் பாலாஜியின் அரசியல் வட்டத்திற்குள் தான் இருக்கும். இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுக கட்சியில் இணைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொங்கு மண்டலத்தை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டதால் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் 55 ஆயிரம் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் முழு கவனமும் தற்போது கோவை மாவட்டத்தில் இருக்கிறது. இதனால் கரூரை கோட்டை விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த வாய்ப்பை தற்போது பாஜக பயன்படுத்திக் கொண்டு கரூரில் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்ட துவக்கமாக தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக பாஜக செந்தில் நாதன் பெயர் அடிபடுகிறது. பாஜக அரசு கரூர் நகரை சுற்றியுள்ள கிராமங்களை குறி வைத்து பக்காவாக திட்டம் போட்டு வருகிறது. ஆனால் திமுகவினர் செந்தில் பாலாஜி வாரத்தில் ஓரிரு நாட்கள் கரூர் மாவட்டத்தில் தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், மற்ற பகுதிகளின் மீது அவரால் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி நியமனத்தில் பண மோசடி செய்ததாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒருவேளை வழக்கு செந்தில் பாலாஜிக்கு பாதகமாக வந்தால் அவர் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் கலக்கமடைந்துள்ள செந்தில் பாலாஜி தற்போது கரூரில் 4 நாட்களாக தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்தால் அவருக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு கரூர் மாவட்டத்திலேயே மக்கள் கூட்டத்தை பாஜகவினர் திரட்டி வருகின்றனர். இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் தன்னுடைய கொடியை நிலையாக நாட்டி விட்டு கரூரை கோட்டை விட்டுவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் வருகிற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால், பாஜகவின் செயல்பாடால் திமுகவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.