இன்று அதிகாலையில் அறிவிப்பு பலகையின் மீது மோதிய விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வீரமலை பகுதியில் வசிப்பவர் சந்தோஷ். 26 வயதாகும் அவர் அலங்காநல்லூரில் பேக்கரி கடை வைத்து நடத்திவருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் ஆனது. மனைவியின் பெயர் மகாலட்சுமி(வயது 21) . இருவரும் அலங்காநல்லூரில் வசித்து வந்தானர். போச்சம்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கணவன் மனைவி இருவரும் நேற்று இரவு காரில் புறப்பட்டனர் .
இன்று அதிகாலை 2 மணி அளவில் கரூர் மாவட்டம் தளவாப்பாளையம் கரூர் -சேலம் சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே செல்லும்போது திடீர் என கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நொடியில் கார் சாலையோரம் இருந்த அறிவிப்பு பலகை தூணில் அதிவேகத்தில் மோதியது . காரின் முன்பகுதி சுக்குநூறாகியது. இவ்விபத்தில் சந்தோஷ்,மகாலட்சுமி இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்து வந்த காவல்துறையினர் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை இருவரும் உயிரிழந்தனர் .இந்த விபத்து ஏற்பட்டது சந்தோஷின் தூக்க கலக்கமா அல்லது வேறு காரணமா என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் . திருமணமாகி மூன்று மாதத்திலேயே புது தம்பதியினர் பலியான சம்பவம் உறவினர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.