கரூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறையும், அதிமுக 7 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். கரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,44,174 ஆகும். சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல், அமராவதி மற்றும் காவிரி ஆறு மாசடைந்து விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சாய கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ஒருங்கிணைந்த சாய பூங்கா அமைக்கப்படும் என வெளியிட்ட அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். போக்குவரத்து வசதிக்காக புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். சுற்றுச் சாலை அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோயம்பள்ளி, மேலப்பாளையம் பாலம் அருகே இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. பழமையான கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர். அழகாபுரி அணையிலிருந்து வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.