கரூர் மாவட்டம் பேருந்து கூண்டு கட்டுதல் தொழிலுக்கு பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும் பேருந்துகள் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆன்மீகம், நெசவு, விவசாயம், அரசியல் போன்றவைகளும் கரூர் மாவட்டத்தில் மிகவும் முக்கியமானது. அரசியலுக்கு முக்கியம் என்று ஏன் கூறப்படுகிறது என்றால், கரூர் மாவட்டத்தில் இருந்து திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என தமிழக அரசியல் பிரபலங்களான அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகிய முக்கிய தலைவர்களின் சொந்த மாவட்டமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கரூரில் பேருந்து சேவை இல்லாதது கவலையாக உள்ளது.
அதாவது கரூரில் நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் ஊட்டிக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அதிலும் இன்று முகூர்த்த தினம் என்பதால் பலரும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றனர். திருச்சியில் பாஜக பேரணியால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் 40 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டதால் பொது மக்கள்அவதிப்பட்டு பயணம் செய்தனர். இந்த காட்சிகளை இணையத்தில் பதிவிட்டுள்ள பலரும் கரூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இரவு நேரத்தில் போதிய பேருந்து வசதி இருப்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.