கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் பாரதியார் நகர் 2-வது தெருவில் மீனவரான கிளாடிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேவியர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கிளாடிஸ், ஐயனார், ஆறுமுகம் உள்பட 8 மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு நள்ளிரவு நேரத்தில் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் படகில் இருந்த பலகைகளை அடுக்கி கொண்டிருந்த போது கிளாடிஸ் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்துவிட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் உடனடியாக கிளாடிஸை காப்பாற்றி காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிளாடிஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.