கர்ணம் போட்டாலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்
புதுச்சேரி மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக விடுதலை நாள் கருத்தரங்கம் தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முதல் அமைச்சர் நாராயணசாமி இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கு முடிந்து செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் பேசியபோது, டெல்லியில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு டெபாசிட் பெற முடியாத கிரண்பேடியை பாஜக அரசு புதுச்சேரியின் துணை ஆளுநராக நியமித்துள்ளது. ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதை இவர் தடுப்பவராக உள்ளார்.
எனவே இந்த ஆளுநரை வேறு மாநிலத்திற்கு அல்லது டெல்லிக்கே மோடி அழைத்துக் கொள்ள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும் தமிழகத்தில் கர்ணம் அடித்தாலும் பாஜகவால் கால் ஊன்ற முடியாது. அது எந்த அணி அமைத்தாலும், ஆட்சியை விலை கொடுத்து வாங்கினாலும் எதுவும் பலிக்காது” என கூறியுள்ளார். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் திமுக கூட்டணியில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. பாஜக நடத்த இருக்கும் வேல் யாத்திரைக்கு தடை போட வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் போகும் இடத்தில் வரவேற்பு இருக்காது அவமானத்தை சந்திக்கட்டும் என விமர்சித்தார்.