கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் இடிக்கப்படுமா? என்பதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டியளித்தார். அப்போது வட மாநிலங்கள் பாணியில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுமா என்று நிருபர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை “வன்முறையில் ஈடுபடுபவர்களை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. அப்போது வன்முறை சம்பவங்கள் நடந்தது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து சேதமடைந்த அரசு சொத்துகளுக்கு உரிய தொகையை வாங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வன்முறையில் ஈடுபட்டவர்களிடமிருந்து தொகையை பெற ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் வீடுகள் புல்டோசர் மூலமாக இடித்து அகற்றப்படுகிறது. ஆனால் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். கர்நாடகத்தில் ராம ராஜ்ஜித்திற்கு பதிலாக ராவணன் ராஜ்ஜியம் நடப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது. எங்களை பற்றி மக்களுக்கு தெரியும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தான் எங்களுக்கு முக்கியம். எதிர்க் கட்சிகள் கூறுவது எங்களுக்கு முக்கியம் அல்ல” என்று அவர் தெரிவித்தார்.