கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வெடிமருந்து வெடித்ததால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் அருகே உள்ள சிமோகா பகுதியில் நேற்று இரவு பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.. இதனால், சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதோடு வீடுகளிலும் நல்ல அதிர்வுகள் காணப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தின் காரணமாக சுற்று வட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், வீடுகளில் கீறல்களும் ஏற்பட்டுள்ளன.
நேற்று இரவு திடீரென ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். சிமோகா நகரின் புற நகர் பகுதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் வெடித்து சிதறிய நிலையில் லாரி ஒன்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படாத நிலையில், அந்த லாரியில் வெடிக்கும் தன்மையுள்ள பொருட்கள் இருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், விபத்து நடந்த பகுதிக்கு சுமார் 6 கிமி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதன் பாதிப்புகள் காணப்படுகிறது. இதுவரை இந்த விபத்தின் காரணமாக 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விபத்து நடந்த போது ஏற்பட்ட நில அதிர்வு சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.