கர்நாடகா சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வீரபத்ரேஸ்வரர் கோவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஐப்பசி மாதம், கர்நாடக மாநிலத்தில் அது கார்த்திகை மாத திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா காரணமாக அங்கு தேர்திருவிழா ரத்து செய்யப்பட்டு சுவாமிக்கு வெறும் பூஜைகள் மட்டும் செய்யப்பட்டது. அதிலும் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறிய அளவிலேயே திருவிழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின் இந்த ஆண்டு பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று இரவு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இன்று காலை சாமி தேரில் வைக்கப்பட்டு கோயிலை சுற்றி வலம்வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தேரானது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தேர் திடீரென கவிழ்ந்ததில் தேரை இழுத்துச் சென்ற பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.
அதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக அங்கிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இதன் காரணமாக உயிரிழப்பேதும் ஏற்படாமல் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். தற்போது விபத்து குறித்து சாம்ராஜ் நகர் மாவட்ட காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது..