கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவுவதை அடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்தது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள சர்வதேச முனையத்தில் இ-பாஸ் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் உள்நாட்டு விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் இ-பாஸ் இல்லாமலேயே பயணித்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து உள்நாட்டு விமான நிலையத்தில் இ-பாஸ் முறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
அதே நேரத்தில் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் இ-பாஸ் முறையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளும் தேவையில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. களியக்காவிளையில் உள்ள பிரதான சோதனைச் சாவடி தவிர மற்ற இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. களியக்காவிளை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனையிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.