கர்நாடக மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவக் கல்வித் துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
குடகு மாவட்டத்தை பார்வையிடுவதற்கு நேற்று மருத்துவக் கல்வித் துறை மந்திரி சுதாகர் சென்றிருந்தார். அங்கு மடிக்கேரியில் இருக்கின்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் குடகு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “கர்நாடக மாநிலத்திற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
அதற்கான முறையான அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் அரசு சார்பாக விரைவில் வெளியிடப்பட உள்ளது.கர்நாடக மாநிலத்திற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளை காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்து கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். அதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு எந்த ஒரு முடிவும் தற்போதைக்கு எடுக்கவில்லை”என்று அவர் கூறியுள்ளார்.