நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவஸ்தான புதூரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் வண்டி மேலாளர். இந்நிலையில் முத்துசாமியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு கர்நாடக அரசு மருத்துவ கல்லூரியில் “சீட்” வாங்கி தருவதாக குறுந்தகவல் வந்தது. இதனையடுத்து முத்துசாமி சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனது மகனுக்கு சீட்டு வாங்கி தருமாறு கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் சில ஆவணங்களை வாங்கிக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். இதனையடுத்து மீண்டும் சில நாட்கள் கழித்து முத்துசாமியை தொடர்பு கொண்ட அந்த நபர் முன்பணமாக 6 1/2 லட்சம் ரூபாய் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.
பின்னர் சீட் கிடைத்து விட்டதாக கூறி மேலும் 6 லட்சம் ரூபாய் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பி மொத்தமாக முத்துசாமி 12 1/2 லட்ச ரூபாய் கட்டியுள்ளார். நீண்ட நாட்களாகியும் அந்த நபர் சீட் வாங்கி தரவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துசாமி நாமக்கல் மாவட்ட சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.