கர்நாடகாவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 பேரை கைது செய்த போலீசார் 270 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் நாமக்கல்லுக்கு காரில் கடத்தி வருவதாக திருச்செங்கோடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு புறநகர சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் தோக்கவாடி பேருந்து நிலைய பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த ஆம்னி வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது வேனில் சுமார் 270 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்துள்ளது.
இதனைதொடர்ந்து ஆம்னி வேனில் இருந்த 4 பேரிடம் விசாரித்ததில் அவர்கள் ஓலைப் பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார், மோகன்ராஜ், பழனிச்சாமி, பாவனியை சேர்ந்த தினேஷ் குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கைது செய்து சரக்கு வேன் மற்றும் 270 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கர்நாடகாவில் இருந்து மொத்தமாக குட்கா பொருட்களை வாங்கி வந்து நாமக்கல்லில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விநியோகம் செய்வதும் தெரியவந்துள்ளது.