ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் கர்ப்பிணி ஆசிரியருக்கு தலைமையாசிரியர் ஆபாச செய்திகளை அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து அவரது செல்போனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்து வந்துள்ளார். இதையடுத்து அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது: “இந்த பள்ளியில்தான் 5 மாதத்திற்கு முன்பாக தான் பணியில் சேர்ந்ததாகவும், அப்போது இருந்து தலைமையாசிரியர் தனக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வருவதாகவும், தான் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தால் தனது பதவியை பயன்படுத்தி தனது வேலையை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் வேண்டுமென்றே வேறு ஒரு பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளார். தான் அந்த பள்ளியில் சேர்ந்து பணியாற்ற முடியாது என்று தெரிவித்ததால், அவர் மேலும் தன்னை டார்ச்சர் செய்தார். இவரின் டார்ச்சரை தாங்க முடியாத கர்ப்பினிப்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக நேரில் ஆஜராகும்படி கர்ப்பிணி பெண்ணையும், தலைமை ஆசிரியரையும் காவல்துறையினர் அழைத்திருந்தனர். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தலைமையாசிரியர் அந்த பெண்ணை மிரட்டியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.