Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியை ரோட்டில் இழுத்துச்செல்லும் கொடூரம்.. நகை பறிக்க முயற்சி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!

சென்னையில் பட்டப்பகலில் கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி மர்மநபர் செயினை பறிக்க முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் உள்ள பல்லாவரத்தில், ரேணுகா நகரில் வசிக்கும் பெண் கீதா. 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் இவர் தன் வீட்டு வாசலில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய மூன்று நபர்களில்  ஒருவர் திடீரென்று கீதாவின் அருகில் வந்து அவரது தாலிச்செயினை பறிக்க முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன கீதா அந்த நபரிடமிருந்து தன் தாலியை காப்பாற்ற போராடி கொண்டிருக்கிறார். ஆனால் அந்த நபர், ஒரு பெண் என்றோ கர்ப்பிணி என்றோ கூட கருதாமல், செயினை மட்டுமே நோக்கமாக கொண்டு மிருகத்தனமாக சாலையில் கீழே தள்ளி விடுகிறார். ஆனாலும் கீதா தன் தாலியை பறிக்கவிடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன் சாலையில் தரதரவென்று கீதாவை இழுத்துச் சென்று மீண்டும் தாலி செயினை பறிக்க முயற்சிக்கிறார். அந்த சமயத்தில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் வருகிறார். அவர் அந்த பெண்ணை காப்பாறுவார் என்று நினைத்தால், அவரோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் தூரத்தில் இருந்து இதை கவனித்த ஒரு இளைஞர் அருகில் வேகமாக வந்து, அதன் பிறகு தயங்கி அங்கேயே நிற்கிறார்.

இதனால் கொள்ளையனிடம் அந்த பெண் போராடிக்கொண்டிருப்பது சில நிமிடங்களுக்கு நீள்கிறது. எனினும் அவர் தன் தாலியை காப்பாற்றி விட்டார். அதன்பின்பு இதற்குமேல் போராடினால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணிய அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து உடனடியாக  தப்பிவிட்டனர்.

அவர்கள் சென்றவுடன், அந்த பெண் எழுந்து அருகில் உள்ள மளிகை கடையில் இருப்பவர்களிடம் உதவி நாடுகிறார். இதனைத்தொடர்ந்து அவர்களும் கொள்ளையனை பிடிப்பது போல் ஆவேசமாக நடந்து வருகிறார்கள். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. தற்போது அந்தப்பெண் காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் பிறகு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |