கலப்படம் செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வெல்லம் ஏல சந்தையில் மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள நிலையில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை தயார் செய்து பிலிக்கல்பாளையத்தில் உள்ள ஏல சந்தையில் வாரந்தோறும் ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த வெல்லம் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் வெல்லங்களில் கலப்படம் செய்யபடுவதாக அதிகாரிகளுக்கு எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு விற்பனைக்காக வைத்திருந்த அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லங்களை சோதனை செய்ததில் அஸ்கா சர்க்கரை சேர்த்து தயார் செய்யப்பட்ட சுமார் 50 ஆயிரத்து 640 கிலோ உருண்டை மற்றும் அச்சு வெல்லங்களை சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வெல்லங்களில் கலப்படம் செய்யப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வெல்லமண்டி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.