மத்திய பிரதேசத்தின் கார்கோன் நகரில், சமீபத்தில் நடந்த ராம நவமி ஊர்வலம் மீது, ஒரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் கலவரம் ஏற்பட்டு ஊரடங்கு அமலானது. இதில், கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டுளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, கார்கோன் நகரில், 10ம் தேதி நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில், ஒரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து, நகரில் உடனடியாக ஊரடங்கு அமலானது.
கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், 153 பேரை கைது செய்தனர்.இந்தநிலையில், 14ம் தேதியில் இருந்து, காலை 8:00 — 12:00 மணி, மாலை 3:00 – 5:00 மணி வரை, ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, நகரில் அமைதி ஏற்பட்டு உள்ளதால், நேற்றிலிருந்து காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, ஆறு மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கிறது.
இந்நேரத்தில், தபால் நிலையங்கள், வங்கிகள், பால், காய்கறி, மருந்துகள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முடி திருத்தும் மையங்கள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வாகனங்கள் செல்லவும், பெட்ரோல் பங்க்குகள் திறக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை.
கலவரத்தில், கார்கோன் போலீஸ் எஸ்.பி., சித்தார்த் சவுத்ரி, மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி, மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா நேற்று கூறுகையில், ”எஸ்.பி., சித்தார்த் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வாசிம் என்ற மொஹ்சின் என தெரியவந்தது. இந்நிலையில் விரைவில், அவர் கைது செய்யப் படுவார்,” என கூறியுள்ளார்.