சேலம் மாவட்டத்திலுள்ள ஆட்டையாம்பட்டியில் வசித்து வருபவர் தினேஷ்குப்தா. இவரது மனைவி லட்சுமி ஆவார். கணவன்- மனைவி இரண்டு பேரும் தங்களது 4 வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைசெய்ய முயன்றனர். இதனை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின் கணவன்- மனைவி இருவரையும் குழந்தையுடன் சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அந்த தம்பதியினர் கூறியதாவது, எங்கள் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில் அருகில் எங்களுக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் வசித்து வரக்கூடிய வீடு கோயில் நிலத்திற்கு சொந்தமானது எனவும் வீட்டை காலி செய்யும்படியும் சிலர் மிரட்டுகின்றனர். மேலும் சென்ற சில நாட்களுக்கு முன் எங்களை வெளியேற்றி வீட்டை பூட்டி விட்டனர்.
இதன் காரணமாக குடியிருக்க வீடு இன்றி சிரமப்பட்டு வருகிறோம். ஆகவே வீட்டை காலிசெய்ய வலியுறுத்தி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும்” என்று கூறினர். சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு நேற்று வந்திருந்தார். அவரது கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இந்த தம்பதியினர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.