தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு காந்தி நகரில் வசித்து வருபவர் நாகேந்திரன் (70). இவர் நேற்றுகாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இதையடுத்து அவர் மெயின் ரோட்டில் நின்ற காவல்துறையினரின் பாதுகாப்பு அரண்களை கடந்து கலெக்டர் அலுவலகத்தின் முன் வந்தார். அங்கு நாகேந்திரன் திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் நாகேந்திரனை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நாகேந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் சமுதாய மக்களின் குல தெய்வம் கோயில் மற்றும் அதன் நந்தவனம் நிலம் குளத்தூர் தெற்கு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ளது. கடந்த 1990ல் எங்கள் சமுதாய ஏழை மக்கள் 23 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் சில பேர் ஆக்கிரமித்து விட்டனர். இது பற்றி தொடர்ந்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே ஏழைகளாகிய எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.