தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான் கொடுக்கிறார்கள். திமுக அரசின் தொடர் விலை ஏற்றத்தின் மூலம் மக்களின் மேல் அக்கறை கொண்டவர்கள் போன்று நாடகமாடிய சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மின் கட்டண உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு முன் ஆவின் பொருள்களின் விலையை அதிகரித்துள்ளார்கள். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. அதை உண்மை என்று நிரூபிக்கும் விதத்தில் விலையேற்றம் மற்றும் வரிவிதிப்பு இருக்கிறது.
திமுக அரசு ஆட்சியில் அமர்ந்தவுடன் முதலில் சிமெண்ட், மணல், செங்கல் மற்றும் கம்பிகள் போன்ற கட்டுமான பொருட்களின் விலையை அதிகரித்தார்கள். இதேபோன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்போம் என்று கூறினார்கள். இதையும் திறனற்ற திமுக அரசு நிறைவேற்ற வில்லை. அதற்கு மாறாக குடிநீர் வரி, வீட்டு வரி, சொத்து வரி மற்றும் மின்சார கட்டணம் போன்ற வற்றை தான் அதிகரித்துள்ளது. திமுக அரசிடம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றுங்கள் என்று யாராவது கேட்டால் உதாசீனமான பதிலை கூறுகிறார்கள். வாக்குறுதிகளை கூறி தானே வெற்றி பெற்றீர்கள்.
அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாமா என்று கேட்டால் தேர்தலின் வெற்றியை வாக்குறுதிகள் நிர்ணயிக்காது என்று திறனற்ற திமுக நிதி அமைச்சர் கூறுகிறார். திமுக அரசு ஆவினியில் விற்பனை செய்யப்படும் பால் பொருட்களின் விலையை அதிக அளவில் உயர்த்தி உள்ளது. நெய் லிட்டருக்கு 30 ரூபாய் வரையிலும், பாதாம் பால் பவுடர் கிலோவுக்கு 100 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. இதேபோன்று மற்ற பொருட்களின் விளையும் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 47-வது ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தின் போது நிதி அமைச்சர் ஒப்புதலின் பேரில்தான் பால் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது.
இந்த வரி விதிப்பை காணலாம் காட்டி 10 ரூபாய் 50 பைசா உயர வேண்டிய தயிரின் விலையை, 12 ரூபாய்க்கு உயர்த்தி விட்டனர். இதனால் ஏழை, எளிய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். இதையெல்லாம் செவி கொடுத்து கேட்பதற்கு திமுக அரசு தயாராக இல்லை. சாதாரண அடி தட்டும் மக்கள் பண்டிகை தினங்களில் ஆவினில் குறைந்த விலையில் இனிப்பு பண்டங்களை வாங்கி வரும் நிலையில், பண்டிகை தினத்தை முன்னிட்டு ஆவினில் இனிப்பு பண்டங்களின் விலையை அதிகரித்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளார்கள். 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆவினில் விற்பனை செய்யப்படும் பால் பொருட்களின் விலையை அதிகரிக்கிறார்கள்.
ஆனால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையை உயர்த்தவில்லை. பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு சம்பந்தமில்லாத பதிலை கூறுவது வேடிக்கையாக பேசுவது என நினைத்து தரம் தாழ்ந்து பேசுவது, பாஜக கொடுக்காத வாக்குறுதிகளை கொடுத்ததாக கூறி பொய் பேசுவது போன்றவற்றை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வாடிக்கையாக வைத்துள்ளார். பால்வளத் துறை அமைச்சர் நாசர் அவர்கள் உள்ளாட்சி மற்றும் பொது பணித்துறை வரை அனைத்து துறைகளின் வசூலையும் கவனித்து வருகிறார். இதனால் தான் மக்கள் நலனை பற்றி சிந்திப்பதற்கு அவருக்கு நேரமில்லை என்று கூறியுள்ளார்.