கலைஞர் உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகும் கூட இந்த அம்மா உணவகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி வந்தபிறகு அம்மா உணவகம் மூடப்படும் அல்லது பெயர் மாற்றப்படும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் அதற்கு மாறாக அம்மா உணவகம் வழக்கம்போல் செயல்பட்டது. அதுவும் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே செயல்பட்டது. சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மக்கள் உணவின்றி பசியோடு போராடி வந்தனர். அப்போது பெரும்பாலும் பல மக்களுக்கு இந்த அம்மா உணவகம் தான் கை கொடுத்தது. இந்நிலையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் கருணாநிதி கண்ட பட்டினியிலா தமிழ்நாட்டை உருவாக்கவும், முதல்வர் முக ஸ்டாலின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் 500 சமுதாய உணவகங்கள் ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கலைஞர் உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வந்தால் தங்களது தலைவர்களின் பெயரில் புதிய திட்டங்களை தொடங்குவது வழக்கம் தான். அந்த வகையில்தான் கலைஞர் உணவகம் தொடங்கப்படுகிறது. மேலும் கலைஞர் உணவகத்தில் வழங்கப்படும் உணவு பட்டியல் குறித்து அவர்களிடம் விசாரணை செய்த போது முட்டை பிரியாணி, சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு, ஆட்டுக்கறி என பல்வேறு உணவுகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கு முட்டை கொள்முதல் செய்வது போல் கலைஞர் உணவகத்தில் முட்டை கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அம்மா உணவகம் போல் இல்லாமல் கலைஞர் உணவகங்கள் லாபகரமாக இயக்கவும், அசைவ உணவுகளை மலிவு விலையில் எளிய மக்கள் சாப்பிடுவதற்கு திட்டமிட்டு வருகின்றது. மேலும் கலைஞர் உணவகங்களில் என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என்பதனையும், அதன் விலை பட்டியலையும் முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.