மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களின் சார்பாக சென்னை பட்டாளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு மின் கட்டணம் உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட பிறகு “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலை தொண்டர்களை பாடவைத்து உற்சாகமூட்டினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது “மக்கள் நல பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் விளம்பரத்தில் கவனம் செலுத்தும் கோயபலஸ் அரசாகவே இந்த அரசு செயல்படுகிறது. தமிழகம் முழுதும் கழக அமைப்பு சார்ந்த மாவட்டங்களில் எழுச்சிமிகுந்த ஆர்ப்பாட்டம் இன்று நடந்து வருகிறது.
இதை காதுகொடுத்து கேட்கமுடியாத அரசாக இந்த அரசு இருக்கிறது. கலைஞர் நினைவிடத்தில் பேனா அமைப்பதற்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி கொடுத்திருந்தாலும், மீனவர்களின் வாழ்வாதாரமானது மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். எதிர்க் கட்சி எனும் பெயரில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். கருணாநிதியின் புகழ் பாடும் அரசகாவே இது இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியை வைத்து அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியாது என்ற பண்ருட்டி ராமசந்திரனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து ஆகும். ஓ.பி.எஸ் கோஷ்டியால் கட்சிரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் ஏதாவது கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த முடியுமா..? அதிமுக சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது. தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்” என்று கூறினார்.