கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக கடந்த 2018 ஆம் வருடம் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகியது. நீண்ட இடைவெளிக்கு பின் கமல்ஹாசன் நடித்துள்ள “விக்ரம்” படம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில் “விக்ரம்” படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் கமலஹாசன் பங்கேற்றார். இந்நிலையில் கமல்ஹாசன் கூறியதாவது, “4 ஆண்டுகளாக எனது நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இவ்வாறு 4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக என் அன்பான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகம் பற்றி லோகேஷ் கனகராஜ் தான் கூறவேண்டும். ஏனெனில் அதற்கும் இவர்தான் இயக்குனர் என நான் முடிவு செய்து விட்டேன்” என தெரிவித்தார்.
அதன்பின் ஒரு செய்தியாளர் கமல்ஹாசனிடம் “மறைந்த முன்னாள் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளன்று விக்ரம்திரைப்படத்தை வெளியிடுவது திட்டமிடபட்டதா” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கமல் “சினிமாகாரனாக கலைஞரைப் பற்றிப் பேச ஆயிரம் இருக்கிறது . இது யதார்த்தமாக எடுக்கப்பட்ட முடிவு” என கூறினார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.