ராட்சத பாறை விழுந்து ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் அருகே பாப்பையன்பட்டி பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கல்குவாரியில் டிப்பர் லாரி ஓட்டுநராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இங்கு கார்த்திக், நிர்மல்ராஜா ஆகிய 2 பேரும் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலைப் பார்த்து வந்தனர். இந்நிலையில் சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து கார்த்திக் மற்றும் நிர்மல் ராஜ் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலமாக கற்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதனையடுத்து மேற்பகுதியில் சுப்பையா டிப்பர் லாரியை ஓட்டி சென்றார். அப்போது ராட்சத பாறை ஒன்று உருண்டு டிப்பர் லாரியின் மேல் விழுந்தது. இதில் டிப்பர் லாரி நசுங்கி சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன்பிறகு திடீரென லாரியின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து பரமத்தி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் இரவு நேரமாக இருந்ததால் பாறைகள் உருண்டு விழும் என்ற அச்சத்தில் மறுநாள் காலை மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.
அப்போது கார்த்திக் மற்றும் நிர்மல்ராஜ் ஆகிய 2 பேரும் 200 அடி பள்ளத்தில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் தீயணைப்புத் துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் சுப்பையாவின் உடலை மீட்பதற்காக ராட்சத பாறைகளை வெடிவைத்து அகற்றினர். இதைத்தொடர்ந்து 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கருகிய நிலையில் சுப்பையாவின் உடல் மீட்கப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த சுப்பையாவின் உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு இறந்த சுப்பையாவிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தனர்.அதன்பிறகு சுப்பையாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து காவல்துறையினர் சுப்பையாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.