நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதன்படி தெலுங்கானாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் சூரிய பேட்டை என்ற பகுதியை சேர்ந்த புஜ்ஜி என்ற பெண்ணுக்கு நாக தோஷம் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். அதனால் கடந்த சில நாட்களாக இரவில் பூஜை செய்துவந்த புஜ்ஜி,நேற்று பிறந்த ஆறு மாதங்களே ஆன தனது குழந்தையை நரபலி என்ற பெயரில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது குழந்தை ரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, அதில் தொடர்புடைய குழந்தையின் தாய் மற்றும் ஜோதிடரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.