இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் இன்னும் முறையான சாலை வசதி இல்லை. இது குறித்து மக்கள் அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கைகள் வைத்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஒருவர் தனது திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை பொதுமக்களுக்காக சாலை அமைத்து மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட வானூர் அருகில் உள்ள நல்லூரில் சந்திரசேகரன்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள HCL டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப தலைவராக உள்ளார். தனது திருமணத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணம் சேமித்து உள்ளார். இருப்பினும் சாலையின் பரிதாப நிலை குறித்து நல்லூர் மக்கள் படும் துயரங்களைக் கண்டு நெகிழ்ந்தார்.
அந்த பணத்தை கிராமத்தில் காண்கிரீட் சாலை அமைக்க பயன்படுத்த முடிவு செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் வானூரில் உள்ள தொகுதி மேம்பாட்டு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை அணுகி, குடியிருப்பு பகுதிகளில் குடியுரிமை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைக்க அனுமதி கோரி மனு அளித்திருந்தார். இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சந்திரசேகரின் நண்பர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 100% பங்களிப்புடன் இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கான நிர்வாக ஒப்பதல்லை பெற உதவினார். அதன் பிறகு 290 மீட்டர் காங்கிரீட் சாலை அமைக்கும் பணி மார்ச் மாத துவங்கி ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. இப்போது சந்திரசேகரன் அந்த பகுதி மக்களுக்கு ஹீரோவாக மாறி இருக்கிறார். இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.