திருமணத்தில் விருப்பமில்லாத மணப் பெண்களை தூக்குவதை தொழிலாக செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதைக்களம் பற்றி பார்ப்போம். மாப்பிள்ளை பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தால் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் மணப் பெண்களுக்கு ஆதரவாக ஷிரிஷ் இருக்கிறார். இதற்கென அவர் ஒரு நிறுவனம் துவங்கி, அதையே தொழிலாக செய்துவருகிறார். இதன் காரணமாக அவர் பல பேரின் பகையை சம்பாதிக்கிறார். இதற்கிடையில் அவருக்கு மிருதுளா முரளி மீது காதல் ஏற்படுகிறது. அத்துடன் மிருதுளாவும் ஷிரிசை விரும்புகிறார். இதனால் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மணப்பெண்களை தூக்கும் தொழிலை ஷிரிஷ் கைவிட வேண்டும் என்ற நிபந்தனையை மிருதுளா விதிக்கிறார்.
அதை ஷிரீசும் ஏற்றுக்கொள்கிறார். இருப்பினும் நண்பருக்காக அவர் அந்த நிபந்தனையை மீறி விடுகிறார். இதன் காரணமாக திருமணத்தை மிருதுளா ரத்துசெய்கிறார். திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஷிரிஷ் வாதாடியும், மிருதுளா அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதற்கிடையில் ஷிரிசுக்கு யாரும் பெண்கொடுக்க மறுக்கின்றனர். அவருக்கு திருமணம் நடைபெற்றதா..?, யாருடன் நடந்தது..? என்பது தான் மீதி கதை. ஷிரிஷ் தன் கதாபாத்திரத்தை உள் வாங்கி நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் சுறு சுறுப்பாக நடனமாடுகிறார். மேலும் அவர் நண்பர்களுடன் சேர்ந்து மணப் பெண்களை தூக்கும் விதம் சிறப்பு.
இதனிடையில் மிருதுளாவுடன் காதல் இருந்தாலும், நெருக்கமான தொடுதல் இல்லை. அதில் மிருதுளா உணர்ச்சிகளை இயல்பாக முகத்திற்கு கொண்டு வருகிறார். இவரைவிட நடிப்பிலும், தோற்றத்திலும் அதிகமான மார்க் வாங்குகிறார் (கதாநாயகிக்கு தோழியாக வரும்) அருந்ததி நாயர். வசன காமெடி வாயிலாக படம் பார்ப்பவர்களை சிரிக்கவைக்க முயற்சி செய்கிறார் சதிஷ். பின் “மார்க் பாபு “வாக வரக்கூடிய யோகிபாபு கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். செந்திலை கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். தரன்குமார் இசையில் பாடல்கள் ஒன்றுகூட தேறவில்லை. இதனிடையில் எம்.விஜய் ஒளிப் பதிவில் காட்சிகள் பளிச். எம்.ரமேஷ் பாரதி டிரைக்டு செய்துள்ளார். இடைவேளை வரையிலும் கதையும், காட்சிகளும் எவ்வித கவன ஈர்ப்பும் இன்றி மெதுவாக கடந்து செல்கிறது. இடைவேளைக்குப் பிறகு கதையுடன் பார்வையாளர்களை ஒன்றவைத்து விடுகிறார் டைரக்டர். பேய்களுக்கும், பிரமாண்டங்களுக்கும் மத்தியில் இப்படி ஒரு படம்.