திருமணத்திற்கு வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
துமகூரு மாவட்டம் கோரட்டகெரே தாலுகா தூவினக்கெறே கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமந்ராஜ். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பூமிகா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அனுமந்த் ராஜ் கடந்த சில நாட்களாக பூமிகா உடன் சரியாக பேசவில்லை என்றும், சோகமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனுமந்த் ராஜ் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது அனுமந்த் ராஜ் திருமணத்திற்காக வாங்கியிருந்த கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி நெருக்கடி கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அனுமந்தராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருமணமான சில நாட்களிலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.