சென்னை சவுகார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பொது வசூல் மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் ஹரிப்ரியா, சென்னை மண்டல உதவி ஆணையர் பெ.க.கவெனிதா கோவில் செயல் அதிகாரி ராதாமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் இணையவழி முறையில் கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையை செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது. அதன்படி இதுவரை 1,492 கோவில்களில் ரூ.10 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அனைத்து கோவில்களின் அசையா சொத்துகளை வருமானம் ஈட்டும் சொத்துக்களாக மாற்ற 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கணினி மூலம் வாடகை அல்லது குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர்கள் வழக்கம்போல் கோவில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் வாடகை வசூல் மையம் அமைக்க இயலாத நிலையில் உள்ள கோவில்களில் வாடகை செலுத்த விரும்புபவர்கள் அருகிலுள்ள பெரிய கோவில்களில் அமைந்துள்ள வசூல் மையத்தில் தொகையினை செலுத்திக் கொள்ளலாம்.
மேலும் இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்ட மற்றும் தொடங்கப்பட உள்ள கல்லூரிகளில் ஆன்மீக வகுப்புகள் தொடங்க உயர்கல்வி துறையிடம் அனுமதி பெற்றவுடன் வகுப்புகள் தொடங்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க பத்திரிக்கையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளோம் என்று அவர் கூறினார்.