தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 31க்குள் வெளியாகிவிடும் என்றும் ஆகஸ்ட்- 1க்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைகள் குறித்து 13 பல்கலைக் கழக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.