தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் உட்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது. கல்லூரி விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
50% மாணவர்களை கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும். விருப்பம் இருந்தால் மட்டும் கல்லூரிக்கு மாணவர்கள் வரலாம். மற்றவர்கள் பாடங்களை ஆன்லைனில் கற்கலாம். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் உடல் வெப்பத்தை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.