இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு முழுவதிலும் மாணவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நிலையில் 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
இதில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவும் 31பேரில் ஒருவராக அடங்குவார். இந்த வழக்கு இன்று நீதிபதி அசோக் பூஷன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, இறுதி ஆண்டு தேர்வை நடத்தவில்லை என்றால் மாணவர்களின் எதிர்காலத்தை சரிசெய்வது என்பது மிக சிரமமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அனைத்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் தன்னிச்சையாக முடிவு எடுப்பது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நீதிமன்றங்கள் தேர்வு குறித்து வேறு தேதியை அறிவிக்கக் கூடாது. இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கின்றார்கள். அதில், கட்டாயம் தேர்வு நடத்தப்படும். ஒருவேளை செப்டம்பரில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு பின்னர் வழங்கப்படும் என்பதை கூறியிருக்கிறார்கள்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரை இருக்கக்கூடிய நிலையில் உச்சநீதிமன்றம் இந்த பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொள்கிறதா ? தேர்வுகளை ரத்து செய்கிறதா ?என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களும் இதை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .