தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து கல்லூரி மாணவர்களும் வரும் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகுதான் செமஸ்டர் தேர்வுநடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகளை நடத்தி தேர்வுக்கான பாடங்கள் விரைவில் முடிக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவியதன் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடியாக நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் தேர்வு நடத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால் தேர்வுக்கான பாடங்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே பாடத்தை நடத்தாமல் தேர்வுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். எனவே தேர்வு ஜனவரி 20க்கு பின் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. எனவே கல்லூரி மாணவர்களுக்கு 6 நாட்களில் வகுப்புகளை முடிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் தொடர்ந்து கனமழையின் காரணமாக கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இதனை அடுத்து வரும் நாட்களிலும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு அதிக விடுமுறை நாட்கள் வர உள்ளதால் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்தி தேர்வு பாடங்கள் விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.