பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியில் செம்மொழி நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்திருந்தார். நெல்லை மாவட்டத்தில் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வுக்கூட்டம் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில், அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் துறையின் சார்பில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் துறை மூலம் இயங்கும் மாணவர் விடுதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மாணவர்களின் திறனை அதிகரிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர் “பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் இயங்கும் மாணவர் விடுதிகள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூடுதலாக மேல் படிப்பு படிக்க செல்லும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு ஆண்டு உதவி தொகை கூடுதலாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் 100% தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று காப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்க விரும்பும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக” அவர் தெரிவித்தார்.