தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வும் ஆன்லைனில் நடைபெற்றது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கல்லூரிகளுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த முறை செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் பல தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் உயர் கல்வித்துறை கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வில் நேரிடையாக நடத்த வேண்டும் என்று உயர் கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த சுற்றறிக்கையை அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகள் ஆகியவை பின்பற்ற வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் கல்லூரி மாணவர்கள், தேர்வு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நேரடித் தேர்வு எழுத வேண்டுமானால் ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் கேட்டனர். அதற்கு இரண்டு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டு ஜனவரி 20ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நேரடித் தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளது என்றார். மேலும் அனைத்து மாணவர்களும் தினசரி கல்லூரிக்கு வர வேண்டும் வேண்டும். இந்த இரண்டு மாதங்களில் அனைத்து பாடங்களும் நடத்தப்பட்டு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.