அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் லலிதா கல்லூரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பிறகு கல்லூரியில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, கூடுதல் வகுப்பறைகள் போன்ற வசதிகள் அமைத்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது எம்.பி இராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகக்கண்ணன், கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.