கல்லூரி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் டெல்லி மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செயிப் அஷ்ரப் (21), மற்றும் ஆதித்யா (21) ஆகிய 2 பேரும் விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கார் பூந்தமல்லி அருகே சென்றபோது திடீரென விபத்தில் சிக்கியதால் கார் லேசாக சேதமடைந்தது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் வாகனம் சேதமடைந்ததற்கு உரிமையாளரிடம் ரூபாய் 20,000 கொடுத்து விடுவதாக கூறியதால், வழக்கு போட வேண்டாம் எனக் கூறி இரு தரப்பினரும் சென்றனர். இந்நிலையில் வெங்கடேசன் தன்னுடைய நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அதன் பின் செயிப் அஷ்ரப் மற்றும் ஆதித்யா ஆகிய 2 பேரிடமும் வெங்கடேசன் வாகனம் சேதமடைந்ததற்கு கூடுதலாக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் மாணவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறியதால், ஆத்திரத்தில் வெங்கடேசன் மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து காரில் செயிப் அஷ்ரப் மற்றும் ஆதித்யா ஆகிய 2 பேரையும் கடத்தி சென்றனர்.
இவர்களை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு மாணவர்களின் உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு ரூபாய் 2 லட்சம் பணம் கொடுத்தால்தான், அவர்களை உயிருடன் விரும்பும் எனக் கூறி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் உறவினர்கள் ராமபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பூந்தமல்லி அருகே மாணவர்கள் கடத்தி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மாணவர்களையும் மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேசன் மற்றும் அவருடைய நண்பர்களான சரத், பார்த்திபன், வக்கீல் தினேஷ்குமார், சந்தோஷ் குமார் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.