டிகிரி கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தொற்று பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கு மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள டிகிரி கல்லூரிகள் வரும் 20ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே மாணவர்கள் நேரடி வகுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி தடுப்பூசி போடாத மாணவர்களுக்காக உள்ளாட்சி நிறுவனங்களின் உதவியுடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களே தடுப்பூசி முகாம்களை அமைக்க வேண்டும் என்று மாநில அரசு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதில் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. வகுப்பறையில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மும்பை புறநகர் ரயில்களில் பயணிப்பதற்கு அனுமதி வேண்டி தலைமை செயலாளருக்கு உயர் மற்றும் தொழில் கல்வி அமைச்சர் உதய் சம்பத் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 4ஆம் தேதி முதல் 8 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இருப்பினும் எந்த மாணவர்களும் கட்டாயத்தின் பெயரில் பள்ளிகளுக்கு அழைக்கப்படுவதில்லை. பெற்றோர்களின் அனுமதியுடன் வருகை புரிந்துள்ளனர். கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் மூன்றாவது அலை எச்சரிக்கை ஆகியவற்றிற்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கல்லூரிக்கு நேரில் வரமுடியாத மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.