சேலம் மாவட்டத்தில் அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சக மாணவிகள் ராகிங் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் விடுதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி வருகின்றனர். இந்த விடுதிகள் அனைத்தும் அரசு கண்காணிப்பில் இயங்கி வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தனித்தனியாக படித்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்திலுள்ள மாணவியர் விடுதி ஒன்றில் மூத்த மாணவிகள் முதலாமாண்டு மாணவிகளை ராகிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் அளித்தனர். புகாரில் அந்த மாணவிகள் தெரிவித்துள்ளதாவது: “கல்லூரி விடுதியில் சேர்ந்து மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. மூன்று நாட்களும் மூத்த மாணவிகள் தங்கள் அழைத்து நடனம் ஆடச் சொல்வது, பாட்டு பாட சொல்வது, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் தங்களை வேலை வாங்குவது போன்றது அதிகரித்து வருகின்றது. இரவில் தங்களால் தூங்க கூட முடியவில்லை. படிப்பதற்காக இங்கு வரும் நாங்கள் மூத்த மாணவிகளின் ராகிங் கொடுமைக்கு ஆளாகி மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சீனியர் ஜூனியர் என்ற முறையில் தங்களை கீழ்த்தரமாக நடத்துகின்றனர். இதுபோன்ற மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தங்களால் படிக்க முடியும்” என்று கூறி அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.